தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!
சென்னை தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அவ்வப்போது ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்னல் மேம்பாட்டு பணிகளும் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தத இந்நிலையில், அதில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ஆகஸ்ட் 02 ம் தேதி வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
இதையும் படியுங்கள் : தேசியக் கொடியை இறக்குமதி செய்ய முடியுமா?- திமுக எம்.பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது என்றும் அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.அது மட்டுமல்லாமல் இன்று (27.07.2024) மற்றும் நாளை (28.07.2024) புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படியே ரத்து செய்யப்படுகிறது என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் ஆகஸ்ட் 03ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்கலில் எந்த வித மாற்றமும் இன்றி பகல் நேரத்தில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் ஆக.1 முதல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், வைகை விரைவு ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14 வரை எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.