267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு! பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் விசாரணை!
சென்னை விமான நிலையம் வழியாக 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி பிருத்வி உள்பட 6 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது.
இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்த யூ டியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை சேர்ந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தும் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : மும்பையில் பள்ளிக்கூடம் திறந்த நீடா அம்பானி! ஆகஸ்ட் முதல் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்!
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் 6 பேருக்கு சம்மன் அனுப்பி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக வித்வேதா பிஆர்ஜி நிறுவன இயக்குநராக இருந்த பாஜக நிர்வாகி பிருத்வியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை அடிப்படையில் வித்வேதா நிறுவனம் சார்பில் சென்னை மால்களில் ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் கடைகளில் சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெழியாகியுள்ளது.
தங்க கடத்தலில் கைதான யூ டியூபர் சபீர் அலி, கடத்தல் கும்பல் சேர்ந்த இலங்கை குமாரிடமும் விசாரணை நடந்துள்ளது. பாஜக நிர்வாகியான பிருத்வி மூலம் விமான நிலையத்தில் கடையை பெற்றது தொடர்பாக சபீர் அலி, குமாரிடமும் விசாரணை நடத்தினர். ரூ.77 லட்சம் பணப்பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஆவணங்கள் அடிப்படையாக வைத்து விசாரணை நடந்துள்ளது.