இந்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தான் தகவல்!
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தங்கள் நாட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 46 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில் மேலும் 5 பேர் உயிரிழந்தாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களை "போர் நடவடிக்கை" என்று கூறிய பாகிஸ்தான், இந்திய விமானப்படையின் பல விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது.
மேலும் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் பேரில் இந்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்ததாகவும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மீதான இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக பல நாடுகள் தெரிவித்துள்ளது.