சென்னையில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது!
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த மற்றும் வைத்திருந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 26 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (ஜன. 08) மதியம், பெரம்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள இடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வியாசர்பாடியை சேர்ந்த சுமன் மற்றும் கொங்கையூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இருவரிடமிருந்து 13.5 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : நாளை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம் - சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!
இதேபோல் திருவல்லிகேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூர்மார்கெட், பெரியமேடு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த டிபியா பாஸ்ட்ரே என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5.5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று காலை அயனாவரம், தாகூர் நகர் 3வது தெரு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அயனாவரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது போதை பொருள் மற்றும் அடிதடி உட்பட 6 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
மேலும் ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வால்டாக்ஸ் ரோடு, அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்வரன், ரமேஷ் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 நபர்களும், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.