மும்பை தாக்குதல் நினைவு நாள் ; மக்களைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலி - திரவுபதி முர்மு
இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில் கடந்த 2008, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 308 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 9 பேர் பாது காப்பு படையினரால் கொல்லப் பட்டனர். மேலும் பயங்கரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இத்தாக்குதல்களானது பாக்கிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
26/11 என அழைக்கப்படும் இந்த தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில், நம் நாட்டு மக்களைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன். தேசம் அவர்களின் உயர்ந்த தியாகத்தை நன்றியுடன் நினைவுகூர்கிறது. அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் ஒன்றாக முன்னேறுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.