’இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 சதவீதம் வரி’ - டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். அதனையடுத்து வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்த டிரம்ப் உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்
.இதைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஒருவேளை இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகிதம் வரை இறக்குமதி வரியை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் டிரம்பின் காலக்கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக இன்றே அறிவித்துள்ளார்.
இது குறித்தான அறிவிப்பை தனது ட்ரூத் வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக, அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. மேலும் அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளதால் நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்துள்ளோம். . மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளனர், மேலும், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராகவும் உள்ளனர். எனவே ஆகஸ்ட் முதல் இந்தியா 25 சதவீத வரியை செலுத்தும்”
என்று தெரிவித்துள்ளார்.