“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” - எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 28.7 கோடி ரூபாய் செலவில் 2393 அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி சோமு எம்பி எழுப்பிய கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல இணையமைச்சர் சாவித்ரி தாகூர் பதில் அளித்துள்ளார். பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 28.7 கோடி ரூபாய் செலவில் 2393 அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 54,449 அங்கன்வாடிகளில் 7605 அங்கன்வாடிகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.
அடிப்படை வசதிகள் இல்லாமல், வாடகை கட்டடங்களில் இயங்கும் அங்கன்வாடிகளை அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகங்களுக்கு மாற்றும் படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் அங்கான்வாடி தொடர்பாக கனிமொழி சோமு எழுப்பிய கேள்விகள்;
“கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் செயலாற்றிய அங்கன்வாடி மையங்களின் விவரங்கள், இந்த அங்கன்வாடிகள் அனைத்தும் சொந்த கட்டடங்களில் இயங்கியதா? அப்படியானால், அதன் விவரங்கள், இல்லை என்றால் அதற்கான காரணங்கள்; கடந்த ஐந்தாண்டுகளில் அங்கான்வாடி மையங்கள் கட்டுவதற்கு மத்திய அரசு ஏதேனும் நிதி ஒதுக்கியதா? அப்படியானால், அதன் விவரங்கள்; இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி கோரியதா? அப்படியானால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.