23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை - போக்குவரத்துத் துறை தகவல்!
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொள்வதற்கான ஒரே பயண திட்டமாக ‘சிங்கார சென்னை பயண அட்டை’ கடந்த ஜனவரி 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் பிராட்வே, சென்ட்ரல், தாம்பரம், கோயம்பேடு, திருவான்மியூர் உள்ளிட்ட 20 இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பேருந்து நடத்துநர்களிடம் சில்லரை பிரச்னை இல்லை. எளிதில் பணம் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரை 23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள்
விற்பனையாகியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அட்டையைப் பயன்படுத்தி இதுவரை 40 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள், மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளுக்கு இதனை பயன்படுத்துவதாகவும், இந்த அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் வகையில் தற்போது 3,900 பேருந்துகளில் மின்னணு இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கார்டை போன் ரீசார்ஜ் செய்வது போல ஜிபே மற்றும் போன் பே மூலமாக ரூ.100 முதல் ரூ.2000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.