20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் அழிப்பு - மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!
கடந்த 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காடுகள் அழிப்பு விகிதத்தில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இவ்வாறு, மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவது வனப் பாதுகாப்புச் சட்டம், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை மீறுவதாக பசுமை நீதித்துறை தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, அருண்குமார் தியாகி தலைமையிலான அமர்வு, நிபுணர் டாக்டர் ஏ.செந்தில்வேல் ஆகியோர் தாமாக முன்வந்து, சுற்றுச்சூழல், காடுகள், பருவநிலை மாற்ற அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய நில அளவைத் துறையும் பதிலளிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டு இடைவெளியில் (மார்ச் 2024 வரை) வடகிழக்கு பகுதிகளைப் பற்றிய குறிப்புடன், இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பின் நிலையை விவரிக்கும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்திய நில அளவைத் துறை தலைவருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
விசாரணை தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய வன கண்காணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "இந்தியா 2000ஆம் ஆண்டிலிருந்து 23.3 லட்சம் ஹெக்டேர் அளவிலான மரங்களை இழந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மொத்த காடுகளில் 6 சதவீதம் குறைவு.
இந்தியாவில் 2002 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 4,14,000 ஹெக்டேர் ஈரப்பதமான முதன்மைக் காடுகள் (4.1%) அழிக்கப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் அதன் மொத்த மரங்களின் இழப்பில் 18% ஆகும். 2001 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 5 மாநிலங்களில் 60% அளவிற்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.