நீட் தேர்வில் ஒரு மதிப்பெண் கூட பெறாத 2,250 மாணவர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2,250 மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் அளிக்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இது 'நெகடிவ்' மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூழலில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது.
இந்த தேர்வை 4,750 தேர்வு மையங்களில் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். நீட் தேர்வில் சர்ச்சை எழுந்ததை அடுத்து, தேர்வர்களின் பெயர்களின்றி தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரிவின்படி, இந்த தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், நீட் தேர்வு எழுதிய 2,250 மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், 9,400க்கும் அதிகமானோர் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர்.
ஒரு மதிப்பெண் கூட பெறாத மாணவர்கள் சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்திருக்கலாம் எனவும் இதனால் நெகடிவ் மதிப்பெண் மூலம் அவர்கள் மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வினாத்தாள் கசிவு நடைபெற்ற மையமாக கருதப்படும் ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள தனியாா் பள்ளியில், தோ்வு எழுதிய பல மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பீகாரில் நீட் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் 180 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இதுவே மிகக் குறைந்த மதிப்பெண் என்று கருதப்படுகிறது.