கேரளாவில் யானை தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் பாலக்காட்டின் முண்டூரில் காட்டு யானை தாக்கியதில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இறந்த ஆலன் ஜோசப் மற்றும் அவரது தாயார் விஜி ஆகியோர் நேற்று இரவு 8 மணியளவில் அருகிலுள்ள கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியில் வந்த காட்டு யானை ஆலனை தாக்கி மிதித்துள்ளது.
அதில் சம்பவ இடத்திலேயே ஆலன் உயிரிழந்தார். ஆலனின் உடல் பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த விஜி, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவம் குடியிருப்புவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் யானைகளில் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.