இந்தியாவில் 22 பேருக்கு புதிய வகை “கோவிட் ஜே.என்.1” வகை தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேருக்கு புதிய வகையான கோவிட் ஜே.என்.1 வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா அலை பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கொரோனாவின் உருமாறிய வைரஸ்கள் பரவத் தொடங்கின. இருப்பினும் எதுவுமே பெரிய அளவில் அலையை உருவாக்கவில்லை. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஜே.என்.1 வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பார்கள் மற்றும் அவர்கள் தடுப்பூசியும் போட்டிருப்பார்கள். ஆனாலும், அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணியுமாறு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகளின் அரசு மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 2,997 ஆக அதிகரித்துள்ளது. இதில் புதிய வகையான கொரோனா ஜே.என்.1 வகை தொற்று 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள்:
பல மாநிலங்களில் தொற்று திடீரென அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முழு மரபணு வரிசைப்படுத்துதலுக்கான அனைத்து சோதனைகளையும் நோயாளிகளுக்கு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, குஜராத், தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று திடீரென அதிகரிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கருத்துப்படி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளாவில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், தற்போது அச்சப்பட தேவையில்லை என்றார். இருப்பினும், மக்கள் நெரிசலான இடங்களில் முகமூடி அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதிகரித்து வரும் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ராஜஸ்தான் அதிகாரிகள் மாநில அளவிலான குழுவை அமைத்துள்ளனர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து மருத்துவமனைகளிலும் சோதனை விகிதத்தை அதிகரிக்கவும், மருந்துகள், உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மனிதவளம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்னாள் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன், இந்த கொரோனா தொற்றின் மாறுபாடு மட்டுமே, கவலை படுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் பீதி அடையத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.