"2+2 அமைச்சா்கள் கூட்டம்" - ஆஸ்திரேலிய அமைச்சர் பென்னி வாங் இந்தியா வருகை...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ள ‘2+2 அமைச்சா்கள்’ கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் இந்தியா வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங்வை இந்திய வெளியுறவுத் துறையினர் வரவேற்றனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்:நடிகராக மாறிய மும்பை இந்தியன்ஸ் அணி கிரிக்கெட் வீரர்!
பென்னி வாங் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது 2+2 அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 14வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள உள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். அவரை குஜராத் முதல்வர் வரவேற்று உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்.
இன்று நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் இவர்களுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.