24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் உயிர் மாய்ப்பு... மகாராஷ்டிரா அரசின் அறிக்கை கூறுவது என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி வருவாய் பிரிவின் கீழ் உள்ள அமராவதி, அகோலா, புல்தானா, வாஷிம் மற்றும் யவத்மால் ஆகிய ஐந்து மாவட்டங்களில், கடந்த 24 ஆண்டுகளில் மொத்தம் 21,219 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமீபத்தில் வெளியான வருவாய் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஜனவரி 2001 முதல் ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. ஜனவரி 2025இல் மட்டும் 80 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மாவட்டத்தில் 5,395 விவசாயிகளும், அகோலாவில் 3,123 விவசாயிகளும், யவத்மாலில் 6,211 விவசாயிகளும், புல்தானாவில் 4,442 விவசாயிகளும், வாஷிமில் 2,048 விவசாயிகளும் இந்த இடைப்பட்ட காலத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2025 இல் மட்டும் அமராவதி மாவட்டத்தில் 10 விவசாயிகளும், அகோலாவில் 10 விவசாயிகளும், யவத்மாலில் 34 விவசாயிகளும், புல்தானாவில் 10 விவசாயிகளும், வாஷிம் மாவட்டத்தில் ஏழு விவசாயிகளும் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
24 ஆண்டுகளில் நடந்த மொத்த தற்கொலைகளில், 9,970 வழக்குகள் அரசாங்க இழப்பீடு பெற தகுதியானவை என்றும், 10,963 வழக்குகள் தகுதியற்றவை என்றும், 319 வழக்குகள் விசாரணைக்காக நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது. 9,740 வழக்குகளில் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
விவசாய கடன்களை திருப்பி செலுத்தாதது, பயிர் சேதம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே இழப்பீடு என்றும், தனிப்பட்ட காரணங்களுக்கான மரணங்களுக்கு இழப்பீடு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.