“2026 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி” - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடைசி நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்து போட்டிடுவதாக அறிவித்தார்.
மக்களவை தேர்தலையடுத்து அடுத்தடுத்து மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்தது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெருபான்மையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதுகுறித்து இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்காதுதான் தோல்விக்கு காரணம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கபடவுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, அடுத்தாண்டு (2026) அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்போம் என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.