2023 உலகின் அதிக வெப்பமான ஆண்டு - ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு அமைப்பு!
2023-ம் ஆண்டு உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டாகும் என ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புவிமேற்பரப்பில் சராசரி வெப்பநிலை 2023-ம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பை நெருங்கியது. இதனால் 2023 ஆம் ஆண்டு பூமியின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது. இதுவரை பதிவு செய்யப்படட பூமியின் வெப்பநிலை வரலாற்றின் படி, மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. "தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, இந்த ஆண்டில்தான் முதல் முறையாக அனைத்து நாட்களிலும் ஒரு டிகிரி அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது" என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை துணைத் தலைவர் சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அண்ணா மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!
2023 இன் வெப்பநிலை குறைந்தது கடந்த 1 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் எந்த காலகட்டத்திலும் இல்லாததை விட அதிகமாக இருப்பதாக சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார். இந்த வரம்புக்கு மேல் புவி வெப்பம் அதிகரிப்பது இப்போது வாழும் மக்களை பாதிக்காது என்றாலும் அவர்களது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் 2024 ஜனவரி மாதம் முதல் முறையாக இந்த 1.5 டிகிரி வரம்பைத் தாண்டி வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.