தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டு சாலை விபத்துகள் - 18,074 பேர் உயிரிழப்பு!
2023-ம் ஆண்டு மட்டும், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை, குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கோவையில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையில் ஒரே எண்ணிக்கையில் 3,642 விபத்துகள் நேரிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் 1,040 பேரும் சென்னையில் 500 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கோவையுடன் ஒப்பிடுகையில் சென்னையில் உயிரிழப்பு குறைய, அவசர கால சிகிச்சை விரைவாக கிடைப்பதே காரணமாக கூறப்படுகிறது. மேலும் கோவையின் புறநகர் பகுதிகளிலேயே அதிக விபத்துகள் நடைபெற்றிருப்பதும் அங்கு அவசர கால சிகிச்சை வசதி இல்லாததும் தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,387 விபத்துகளில் 912 பேரும், திருப்பூரில் 3,292 பேரில் 861 பேரும், சேலத்தில் 3,174 விபத்துகளில் 787 பேரும், கடலூரில் 3,094 விபத்துகளில் 580 பேரும், மதுரை மாவட்டத்தில் 2,642 விபத்துகளில் 876 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் திருவள்ளூரில் 2,590 விபத்துகளில் 716 பேரும், விழுப்புரத்தில் 2,585 விபத்துகளில் 548 பேரும், திருச்சியில் 2,416 விபத்துகளில் 720 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2022-ம் 64,105 விபத்துகளில் 17,844 பேர் உயிரிழந்துள்ளனர். 2023-ம் ஆண்டு 66,841 விபத்துகளில் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.