2020 டெல்லி கலவரம் - பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் 40 முஸ்லிம்கள், 13 இந்துக்கள் உட்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தில் வீடுகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், மசூதிகள் என்று ஆயிரக்கணக்கில் உடைமைகள் சேதபடுத்தப்பட்டன.
இந்த வன்முறை தொடர்பாக தற்போது டெல்லியின் சட்டத்துறை அமைச்சராக உள்ள கபில் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. ஆனால், டெல்லி காவல்துறை அது குறித்து விசாரணை நடத்தவில்லை. மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்த டெல்லி காவல்துறை, கபில் மிஸ்ரா இந்த வழக்கில் அநியாயமாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் கலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தது.
இதனையடுத்து கபில் மிஸ்ரா மற்றும் பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் மற்றும் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் பிரதான் உட்பட ஐந்து பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்கக் கோரி முகமது இலியாஸ் என்பவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை மாஜிஸ்டிரேட் வைபவ் சவ்ராசியா பா.ஜ.க அமைச்சர் உட்பட 5 பேர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.