இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து இந்த வழக்கை வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து நேரில் சென்ற சிபிசிஐடி போலீசார் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.