ஒரு மாதத்தில் 200 ஓவியங்கள்; அசத்தும் நான்காம் வகுப்பு மாணவன்
மதுரை அருகே நான்காம் வகுப்பு பயிலும் மாணவன், ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில், வசிக்கும் வினோத்குமார் - தமிழரசி தம்பதியின் மூத்த மகன் மகிழன் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஓவியத்தின் மீது அதிக விருப்பம் கொண்ட மகிழன் , வெளியில் சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் வீட்டினுள் ஒரு பேப்பர் பென்சிலை எடுத்துக்கொண்டு, அவ்வப்போது தான் நினைக்கும் உருவங்களை வரைந்து வருகிறார்.
இப்பழக்கம் தொடர்கதையாக, நாள்தோறும் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் வீட்டினுள் பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா, அரசியல் தலைவர்கள், முன்னோர்கள் மற்றும் குழந்தைகள் என பலரின் உருவப்படங்களை வரைந்து வந்தார். பென்சிலால் படங்களை வரைவது மட்டுமின்றி, அவற்றுக்கு வண்ணங்கள் கொடுத்து மெருகூட்டி வருகிறார்.
ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட மகிழன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 ஓவியங்களை வரைந்து அசத்தியதாக கூறப்படுகிறது. இவரது தாய் தமிழரசி, தனது மகன் சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது அதீத பற்று கொண்டுள்ளதால், மிகப்பெரிய ஓவியராக வளர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். நான்காம் வகுப்பு பயிலும் மாணவன், சிறு வயதிலேயே தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஓவியங்களை வரைவதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.