Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறப்பு..

08:08 PM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி அமைந்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியானது தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணத்தால், 2896 மில்லியன் கன அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 21.2 அடி உயரமுள்ள ஏரியில் தற்போது 19.42 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையினால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது நீர்வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து இன்று (நவ.29) மாலை 4 மணிக்கு விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Excess waterNews7Tamilnews7TamilUpdatesprecautionary measurePuzhal Lakethiruvallur
Advertisement
Next Article