ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெயர் இடம் பெற்றது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக அமலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அதோடு சுகேஷிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸாவிடம் அமலாக்கத்துறை இதுவரை 5 முறை விசாரணை நடத்தியுள்ளது.
ஆனால் அவர் அமலாக்கத்துறையிடம் தான் நிரபராதி என்றும், சந்திரசேகரின் குற்றப்பிண்ணணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆஜராக அமலாக்கத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.