For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் 'சுபிக்ஷா' சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை!!

10:15 PM Nov 20, 2023 IST | Web Editor
விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும்  சுபிக்ஷா  சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை
Advertisement

நிதி நிறுவன மோசடி வழக்கில் விஸ்வபிரியா நிதி நிறுவனத்தின் இயக்குநரும்,
'சுபிக்ஷா' சூப்பர் மார்க்கெட் உரிமையாளருமான சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள்
கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

சென்னை அடையாறு காந்தி நகரில், 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும்
செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை
நம்பி, 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். குறிப்பிட்ட முதிர்வு
காலத்தில் பணத்தை திரும்ப அளிக்காமல், முதலீடுகளை பெற்று விஸ்வபிரியா நிதி
நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2013-ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்', அதன் துணை நிறுவனங்களான அக்ஷயபூமி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என, 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் சுபிக்ஷா
சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ்
உள்பட 17 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு
செய்து, 2020 ஆண்டு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், 587 முதலீட்டாளர்கள் புகார்களின்படி, 3,800க்கும் மேற்பட்ட வைப்பீடுகள்
வாயிலாக, 47.68 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணை காலத்தின் போது, இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான இயக்குனர் அப்பாதுரை, வழக்கில் தேடப்படும் குற்றவாளி என, சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. வழக்கு விசாரணை, சென்னையில் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு
முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி இன்று
பிறப்பித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு:

வழக்கில் இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகளும், இயக்குநர்
ஸ்ரீவித்யாவுக்கு நான்கு ஆண்டுகளும், மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டுகளும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இதில் 180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது.

நிதி நிறுவன இயக்குநர் ராகவன், மோகன் ராமசாமி ஆகிய இருவர் மீதான
குற்றசாட்டுகள் நிரூபிக்க படவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாகவும், இறந்த மூவரின் மீதான வழக்கு கைவிடப்படுவதாகவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement