தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த முதலமைச்சர், தனியார் தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ. 438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும். அதோடு, தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் (TANTEA) பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலை கவனத்திற்கு வந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேயிலைத் தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.