2 வயதில் காணாமல் போன குழந்தை! -AI உதவியுடன் தேடும் சென்னை காவல்துறை!
சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தையை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் புகைப்படத்தை உருவாக்கி, கண்டுபிடிக்க காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் 2 வயது மகள் கவிதா 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். இது குறித்து கணேஷ், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணேஷ் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே குழந்தை காணாமல் போன வழக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தையை தேடும் முயற்சியில் அப் பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அவர் தற்போது எப்படி இருப்பார் என்ற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை - மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
கவிதாவின் பழைய படம், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் துறையினர் சுவரொட்டி வெளியிட்டுள்ளனர். அதில் மாயமான குழந்தை கவிதாவைப் பற்றி தகவல் தெரிந்தால் 94444 15815, 94981 79171 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.