தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புது தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் ஆர்த்திகா, வயது 17. இவர் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி இருந்தார். தேர்வை எழுதி விட்டு வந்த நாளிலிருந்து சரியாக தேர்வு எழுதவில்லை என்று பெற்றோரிடம் சொல்லி அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.
தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்திலேயே ஆர்த்திகா இருந்து வந்ததாக தெரிகிறது. தேர்வு பயத்தில் இருந்து ஆர்த்தியா வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகைக்குச் சென்று தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது .
இந்த நிலையில் +2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் +2 மாணவி ஆர்த்திகா ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 48 மதிப்பெண்களும், இயற்பியலில் 65 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 78 மதிப்பெண்களும், விலங்கியல் படத்தில் 80 மதிப்பெண்களும், தாவரவியலில் 70 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 413 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
மாணவி ஆர்த்திகா தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.