பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து சிக்கிய 2 சிறுத்தைகள்!
பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் சிக்கியுள்ளன.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வேம்பையாபுரம் மற்றும் அனவன் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனிடையே, கடந்த வாரம் அனவன் குடியிருப்பு பகுதியில், ஆடு ஒன்றை சிறுத்தை தூக்கிச் சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் பகுதியை கண்டறிந்து கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 18-ம் தேதி இருவேறு மலையடிவார பகுதிகளில் இரண்டு பெண் சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் மணிமுத்தாறு வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படியுங்கள் : கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் SRH தோல்வி!
இதனைத்தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வேம்பையாபுரம் பகுதியில் வனத்துறை மேலும் இரண்டு கூண்டினை வைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த வாரம் வனத்துறையினரால் வைக்கப்பட்டிருந்த கூண்டில், இன்று (மே 22) ஒரே நாளில் இரண்டு சிறுத்தை சிக்கியுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். பிடிப்பட்ட சிறுத்தைகளை பாபநாசம் அருகே வனப்பகுதிக்குள் விடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.