பணயக்கைதிகள் மீட்பு - இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியீடு!
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து இரண்டு பணயக்கைதிகளை மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவின் தாக்குதல்களின்போது இஸ்ரேலைச் சேர்ந்த் 253 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களில் பெர்னாண்டோ மர்மன் (61) மற்றும் லூயிஸ் ஹார் (70) ஆகியோரும் அடங்குவர்.
மர்மன் மற்றும் ஹார் ஆகியோரை ஒரு தற்காலிக ஹெலிபேடிற்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. பணயக்கைதிகளாக இருக்கும் மீதமுள்ள 134 கைதிகளை விடுவிக்க இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.