மகாராஷ்டிரா பள்ளியில் 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை... வெடிக்கும் போராட்டங்கள்... போலீஸ் தடியடி!
மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் கழிவறையில் வைத்து 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் அங்குள்ள துப்புரவு பணியாளர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச் சம்பவத்தை கண்டித்து பத்லாபூர் பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த பள்ளியும் மூடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த குற்ற சம்பவத்தை கண்டித்து தானேவில் உள்ள பத்லாபூர் ரயில் நிலையத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் மற்றும் தானேவின் கல்யாண் பகுதிக்கு இடையேயான ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் 10 ரயில்கள் பாதைமாற்றி விடப்பட்டதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் காவலுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோருக்கு தெரிய வந்தது எப்படி?
ஆக.12 அன்று பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் பயந்து, பள்ளிக்கு போக மறுத்துள்ளனர். பெற்றோர்கள் விசாரித்ததில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில், ஒரு குழந்தையின் அந்தரங்க பகுதியில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆக.16 போலீசிடம் புகார் அளித்தும் 12 மணிநேரத்திற்கு பின்னரே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி கேமராக்களும் வேலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 23 வயதான துப்புரவு பணியாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு பதியாதது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பள்ளியின் முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோரை பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. முக்கியமாக பள்ளியில் பெண் உதவியாளர்கள் யாரும் கழிவறைக்கு பணியமர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.