தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் - வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!
11:46 AM Nov 24, 2023 IST | Web Editor
Advertisement
உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் பண நடமாட்டத்தை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பெத்த அம்பரபேட்டை ஓ ஆர் ஆர் அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அவற்றில் மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்தவர்களிடம் இது பற்றி விசாரணை நடத்திய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பணத்தை கார்களுடன் பறிமுதல் செய்த போலீசார், அவற்றில் இருந்த ஐந்து பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பணம் எங்கிருந்து, யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சௌம்யா.மோ
Advertisement