காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கடத்திய 2 பேர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 24) என்பவர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை விட்டு விலகியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள், இருவரும் காதலிக்கும் போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என அந்தப் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் பேசி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெண்ணின் நண்பர்கள் கோகுலை, நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மதுரை வந்த கோகுலை, மிரட்டி செல்போனில் உள்ள புகைப்படங்களை அழிக்குமாறு கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான தகராறில், மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோகுலை அந்த மாணவர்கள் காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது காதல் பிரச்சனையில் கோகுலை கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இது குறித்து கோகுல் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த கார்த்திக் (21), முகேஷ் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.