Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூலி பெண் தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி #GST பாக்கியா? அதிகாரிகளின் நோட்டீஸால் அதிர்ச்சி!

04:52 PM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

58 வயது பெண் கூலித் தொழிலாளிக்கு, 'ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்' என அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸ் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் ராணி பாபு (58). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகனும் அதேபோல் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ராணிக்கு திருச்சி மாவட்டம் பாலக்கரை வணிக வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில் அவர் ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸை பார்த்ததுமே ராணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் 10 ஆயிரம் சம்பாதிக்கும் தான் எப்படி 2 கோடி ரூபாய் செலுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து ஆம்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ராணிக்கு ரூ 2 கோடி செலுத்துமாறு கூறி நோட்டீஸ் எப்படி வந்திருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு பகுதிக்குள்பட்ட மணப்பாறை சாலை மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் ராணி பாபு என குறிப்பிடப்பட்டுள்ளது. ராணியின் பான்கார்டு, ஆதார் கார்டுகளை கொண்டு இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் வரி பாக்கியாக ரூ 1,07,50,284 வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அபராதம் ரூ 1,07,05,294 மற்றும் வட்டி ரூ 24,86,436 என மொத்தம் ரூ 2,39,87,024 செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது. ராணி பாபு பெயரில் நிறுவனம் உள்ளதாக ஆவணங்கள் காட்டுவதால் அவரது பெயரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காட்கரை பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணபரிவர்த்தனைக்காக கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி பாக்கியை செலுத்துமாறு ராணி பாபுவுக்கு கடந்த ஜூலை மாதமே கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிநபர்களின் ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதால், இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் இதற்கு உரிய தீர்வு வேண்டும் எனவும் சமூகநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Commercial Tax DepartmentDaily WagersGST
Advertisement
Next Article