வடக்கு சிரியாவில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 18 பெண்கள் உட்பட 19 பேர் பலி!
வடக்கு சிரிய நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். மன்பிஜ் நகரின் புறநகர்ப் பகுதியில் =பெண் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே கார் வெடித்தது. இந்த விபத்தில் ஒரு ஆண் உட்பட 18 பெண்கள் இறந்துள்ளனர்.
மேலும் 12 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்தில் மன்பிஜில் நடந்த ஏழாவது கார் வெடிகுண்டு வெடிப்பு இது என்று சிவில் பாதுகாப்பு துணை இயக்குனர் முனிர் முஸ்தபா கூறினார்.
அதிபர் பஷர் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ்-ல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கு எந்த குழுவும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.
சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் துருக்கிய ஆதரவு பிரிவுகள், அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று மன்பிஜில் நடந்த கார் குண்டுவெடிப்பில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி மாநில செய்தி நிறுவனம் SANA தெரிவித்துள்ளது.