தலைக்கவசங்களுக்கான 18% ஜிஎஸ்டி-க்கு விலக்கு: ஐஆர்எஃப் பரிந்துரை!
சாலை விபத்துகளைக் குறைக்க தலைக்கவசங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என சர்வதேச சாலை கூட்டமைப்பு (ஐஆர்எஃப்) பரிந்துரைத்துள்ளது.
தற்போது இரு சக்கர சாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்கிற நிலை இருக்கும் போது, அதற்கான தர நிர்ணயம் மற்றும் அதை உறுதிப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் கேள்வி எழுகிறது. மிகவும் அவசியமான ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்படுவது விவாதப் பொருளாக ஆன போதும் வரி விலக்கு கிடைக்கவில்லை.
2022-ம் ஆண்டில் நிகழ்ந்த 4,61,312 சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 50,029 பேர் உயிரிழந்தனர். அதில் 35,692 பேர் வாகன ஓட்டுநர்கள் ஆவர் என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையையும், ‘போஸ்ச்’ அறிக்கையையும் ஒப்பிட்டு இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் குறித்து ஐஆர்எஃப் தலைவர் கே.கே.கபிலா கூறுகையில், "உலக அளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவின் பங்கு 11% ஆக உள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு 15.71 முதல் 38.81 பில்லியன் டாலா் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் அதிகப்படியான மக்கள் குறைந்த வருமானம் உடையவர்களாக உள்ளனர்.
அதனால் அவர்கள் குறைந்த தரத்திலான தலைக்கவசங்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, குறைந்த விலையில் தரமான தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைக்கவசங்களுக்கான 18% ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேண்டும்” என்றார்.
தரமான, அதோடு விலை குறைவான ஹெல்மெட் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டால் இன்னும் தரமான முறையில் ஹெல்மெட்டுகளை தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன் வருவார்கள் என்றும் கே.கே.கபிலா வலியுறுத்தினார். குறைவான விலைக்கு தரமான ஹெல்மெட் கிடைக்கும்போது அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கபிலா குறிப்பிட்டார்.