#SriLankaElection | 17வது நாடாளுமன்ற தேர்தல்... அதிபர் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் களத்தில் உள்ளன. இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (நவ.14) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியவில் நிறைவடைந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
16 மாவட்டங்களின் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளையும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
பெரும்பான்மைக்கு 113 இடங்களும், சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சிறப்பு பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.