தமிழ்நாட்டில் மொத்தமாக 1085 வேட்புமனுக்கள் ஏற்பு! 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 1749 மனுக்கள் தாக்க செய்யப்பட்டிருந்த நிலையில், 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்நிலையில், 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
39 தொகுதிகளில் மொத்தம் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 22 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.