"நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின நிலையில், பல முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.