சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்கள் கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள் : WPL 2024 இறுதிப்போட்டி : டெல்லி – RCB அணிகள் இன்று மோதல்! – சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?
சோமாலியா கடற்கொள்ளையர்களால் எம்.வி.ருயென் என்ற சரக்கு கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பல் கடந்த 14 ஆம் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில், அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பதும், மற்ற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் இந்த எம்.வி.ருயென் என்ற சரக்கு கப்பலை பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.
இந்திய கடற்படை வீரர்கள் நேற்று முன்தினம் (மார்ச் 15 ஆம் தேதி) எம்.வி.ருயென் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியது. அப்போது சரக்கு கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, சரக்கு கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சோமாலியா கடல் பகுதி கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும், 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படை வீரர்களிடம் சரணடைந்தனர் என்றும் அந்த கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.