நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடாங்கி பாளையம் ஊராட்சி, பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மனைவி நாச்சியம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
16 வயதான இவர்களின் மகன் மணிகண்டன், காரணம்பேட்டை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
தற்போது தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி மாசிலாமணி தோழிகளுடன் அருகில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றார். மணிகண்டன் குட்டையின் ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவனுடன் இருந்த நாய்க்குட்டி குட்டையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாயை காப்பாற்ற மணிகண்டன் சென்ற போது அவரும் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
குட்டையில் விழுந்து மணிகண்டன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட அவரது அக்கா மாசிலாமணி மற்றும் தோழிகள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் குட்டையில் குதித்து மணிகண்டனை காப்பாற்றி முதல் உதவி அளித்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்புத் துறையினர் வந்து மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சூலூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.