பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு - அதிர்ச்சி வீடியோ!
இந்தோனேஷியாவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண், மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தில் வசித்து வந்த 45 வயதான ஃபரிதா எனும் பெண் கடந்த ஜுன் 6-ம் தேதி முதல் வீட்டிற்கு வராததால், காணாமல் போனதாகக் கூறி அவரது கணவருடன் சேர்ந்து கிராமத்தினரும் தேடி வந்துள்ளனர். அருகிலுள்ள பகுதியில் தேடுகையில் அந்தப் பெண்ணின் உடைமைகளை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கிராமத்தினரிடம் கூறி தேடுதலைத் தீவிரப்படுத்தியபோது அவர்கள் அங்கு மலைப்பாம்பு ஒன்று பெரிய வயிற்றுடன் இருப்பதைக் கண்டுள்ளனர்.
பின்னர், அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்தபோது ஃபரிதாவின் தலை வெளிப்பட்டுள்ளது. உடனே, மலைப்பாம்பை முழுமையாகக் கிழித்து அதன் வயிற்றில் இறந்து கிடந்த ஃபரிதாவை அவர் உடுத்தியிருந்த உடையுடன் வெளியே எடுத்ததாக அந்த கிராமத்தின் தலைவர் சர்தி ரோஸி கூறினார். ஃபரிதாவை முழுங்கிய மலைப்பாம்பு 5 மீட்டர் (16 அடி) நீளம் கொண்டது என அந்தப் பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறினாலும், இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் மலைப்பாம்பு முழுங்கி பலர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு, தென்கிழக்கு சுலவேசி பகுதியின் தினங்கியா மாவட்டத்தில் 8 மீட்டர் நீளம் (26 அடி) கொண்ட மலைப்பாம்பு ஒரு விவசாயியின் கழுத்தை நெரித்து விழுங்க முயன்றபோது அங்குள்ள மக்கள் அதனைக் கொன்றனர். அதேபோல 2018-ம் ஆண்டில் தென்கிழக்கு சுலவேசி பகுதியின் முனா நகரத்தில் 54 வயதுப் பெண் ஒருவரை 22 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு விழுங்கி அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய ஆண்டு, தெற்கு சுலவேசி பகுதியில் காணாமல் போன விவசாயி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்பு விழுங்கி அதன் வயிற்றில் இறந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.