பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 16 பொதுமக்கள் - பதிலடிக்கு ரெடியான இந்தியா!
பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கு இந்தியா நேற்று(மே.07) ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஹ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதில் சில பொது மக்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து பயங்கரவாத முகாம்களில் மட்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
ஆபரேசன் சிந்தூருக்கு பதில் தரும் வகையில் பாகிஸ்தானும் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஹரியான மாநிலம் பல்வால் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், நேற்றிரவு இந்தியாவின் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ட்ரோன் தாக்குதலை Counter UAS Grid என்ற நவீன பாதுகாப்பு கருவியை கொண்டு தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கி, மோர்டார், கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று(மே.08) காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும் அமைப்புகளையும் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.