150 டன் தக்காளி...22,000 மக்கள் - களைகட்டிய #Spain தக்காளி திருவிழா!
ஸ்பெயினில் பாரம்பரிய திருவிழாவான தக்காளி திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் சுமார் 22,000 பேர் கலந்து கொண்டு தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசியும் , தக்காளிச் சாறை பூசிக் கொண்டும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படும் வழக்கம். 1945-ஆம் ஆண்டில் தக்காளி விளைந்திருந்த பகுதிகளில் குழந்தைகள் தக்காளியை வீசியெறிந்து விளையாடியதே இந்த திருவிழாவிற்கான ஆரம்பப்புள்ளி எனக் கூறப்படுகிறது. இந்த திருவிழா பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா நேற்று நடைபெற்றது. லா டொமேடினா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் திரளாக பங்கேற்றனர்.
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தலா ஒருவருக்கு ரூ.1,400 (16.70 டாலர் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இந்த தக்காளி திருவிழாவில் வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என 22 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான 1,50,000 கிலோ கணக்கிலான தக்காளிகள் 7 லாரிகளில் கொண்டு வந்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன. இதனைத் தொடர்ந்து தக்காளிகளை மற்றவர்கள் மீது வீசியும், தங்கள் மீது தக்காளிகளை பிழிந்து பூசியபடியும் காணப்பட்டனர்.
இந்த திருவிழாவிற்கு என்றே பிரத்யேகமாக தக்காளிகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த தக்காளிகள் அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவை. மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல. இதன்பின்பு. தெருக்களில் உள்ள தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பாய்ச்சியடித்து, சுத்தம் செய்தனர்.