சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.
மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே போன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை மக்களவை கூடியவுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என்று பேசினார்.
இதனிடையே மக்களவையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாபன். ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, எம்.பி.க்கள் கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் ஆகிய 9 எம்.பி.க்கள், மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
15 MPs have been suspended for asking the government to be accountable for the breach of security in the Parliament. pic.twitter.com/GQEvDlYBtd
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 14, 2023
மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனை திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதற்காக 15 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.” என பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“மஹூவா மொய்த்ரா விசாரணை கூட மேற்கொள்ளப்படாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் புகைக் குப்பிகள் வீசியவர்களுக்கு நுழைவுச்சீட்டுகளை வழங்கிய எம்.பி மீது எந்த நடவடிக்கைகயும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி-யை இடைநீக்கம் கூட செய்யவில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கக் கோரி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்கிறார்கள். இது எப்படி ஜனநாயகமாகும்?” இவ்வாறு தெரிவித்துள்ளார்.