ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ராஜிநாமா... புதிய கட்சி தொடங்குவதாகவும் அறிவிப்பு!
ஆம் ஆத்மி கட்சிக்கு தலையில் இடியை இறக்கும் வகையில், டெல்லியில் 15 நகராட்சி கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். மேலும் இந்திரபிரஸ்த விகாஸ் என்ற தனி கட்சியை துவங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் எனவும் தெரிவித்துள்ளனர். முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணக்ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
முகேஷ் கோயல் டெல்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றியதால், அவரது விலகல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
"கடந்த சில ஆண்டுகளாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் நாங்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். மேலும் பல கவுன்சிலர்கள் எங்கள் புதிய கட்சியில் சேரக்கூடும்” என்று கோயல் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட கோயல் தோல்வியடைந்தார்.