சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் 18 படி வழியாக சென்று தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இதுவரை மட்டும் 15.82 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக, தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கனனபாதையில் உள்ள ஒவ்வொரு நிலையத்திலும் பக்தர்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நெரிசல் குறைவதற்கு ஏற்ப சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ய டியூட்டி மாஜிஸ்திரேட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 80-85
பேர் 18-ம் படி வழியாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது கடந்த வாரத்தை விட
அதிகமாகும். இதுவரை 15,82,536 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை முழுவதும் 1950 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானம் வரும் ஐயப்ப பக்தர்கள், அதிகாரிகள்,
பணியாளர்கள் என அனைவருக்கும் இலவச தண்ணீர், பிஸ்கெட் விநியோகம்
செய்யும் பணியில் தேவசம்போர்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.