For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் - போலீசார் தீவிர கண்காணிப்பு!

07:42 AM Apr 20, 2024 IST | Jeni
ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்ட 1 458 வாக்கு இயந்திரங்கள்   போலீசார் தீவிர கண்காணிப்பு
Advertisement

வடசென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

Advertisement

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வடசென்னை தொகுதிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே. நகர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,458 வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், அரசியல் முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடி மையத்தில் சீல் வைக்கப்பட்டது. அந்த சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் அங்கிருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன், ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டன.

ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முழுவதுமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தளத்திற்கும், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளனர். மொபைல் ஃபோன் உள்ளிட்ட கருவிகளை, இந்த மையத்திற்கு கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,458 வாக்கு இயந்திரப் பெட்டிகள் இந்த கல்லூரியில் வைக்கப்பட்டடுள்ளன.

இதையும் படியுங்கள் : “வாக்குப்பதிவு குறைந்தது குறித்து மக்கள் தான் சிந்திக்க வேண்டும்..!” - சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முகவர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரம் கண்காணிக்க வசதியாக திரைகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags :
Advertisement