பத்திரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... மாற்று விமானத்தில் 108 பயணிகள் சார்ஜா பயணம்!
திருச்சியில் இருந்து 108 பயணிகள் மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் AXB613 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. உடனே விமானத்தை மீண்டும் தரையிரக்க விமானிகள் முயற்சித்துள்ளனர். ஆனால், விமானத்தில் முழு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால், தரையிறங்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை அறிந்த விமானிகள், சுமார் இரண்டரை மணிநேரம் வானிலேயே வட்டமடித்தனர்.
பின்னர் மீண்டும் விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது. இருப்பினும், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த விமானத்தில் மொத்தம் 141 பயணிகள் இருந்தனர். தரையிரங்கிய பின்னரே பயணிகள் பெருமூச்சு விட்டனர். பயணிகளை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து சுமார் ஆறு மணி நேர தாமதத்திற்கு பிறகு வேறொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் சார்ஜா புறப்பட்டனர். 108 பேர் மாற்று விமானம் மூலம் சார்ஜா புறப்பட்டனர்.
மேலும் 36 பயணிகள் தங்களது பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். வேறு சிலர் சார்ஜா பயணத்தை ரத்து செய்து, பயணத்தொகையை ஏர் இந்தியாவிடம் திரும்ப பெற்றுக் கொண்டனர்.