பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு - 5 பேர் கைது!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் என்ற நபர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறியதாவது, "பஞ்சாப் மாநிலத்தின் பங்கலி, பாதல்புரி, மராரி கலான், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போது உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக" தெரிவித்துள்ளார்.