For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்! ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

09:51 PM Jun 19, 2024 IST | Web Editor
கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்  ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் இன்று (19-6-2024) வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார். வயது 26, த/பெ. கணேசன் நேற்று அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், சுரேஷ், வயது 40 த/பெ. தர்மன் மற்றும் சேகர், வயது 59, த/பெ கந்தன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி
இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூராய்விற்குப் பின்பு தெரியவரும்.

மேற்கண்ட 26 நபர்களில், வடிவு, த/பெ சுரேஷ், மற்றும் கந்தன் த/பெ சின்னு ஆகிய இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிலர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 13 -ஆக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி, வயது 49, த/பெ. கனகு என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப., உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, இ.கா.ப தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.. கள்ளக்குறிச்சி கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். மாவட்டக் காவல் அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கவும் ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு அதிகரித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Tags :
Advertisement