நைஜீரியாவில் கடத்தப்பட்ட 137 பள்ளி மாணவர்கள் - 2 வாரங்களுக்கு பின் பத்திரமாக மீட்பு!
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி மானவர்கள் மீட்கப்பட்டனர்.
நைஜீரியாவின் சில பகுதிகளில் அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 7 ஆம் தேதி கடுனா மாநிலத்தின் குரிகா பகுதியில் உள்ள பள்ளியில் 137-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாநிலத்தின் வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் இருந்து பள்ளி மாணவர்களை நைஜீரிய ராணுவத்தினர் மீட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா? என்பது குறித்த முழுமையான தகவல்களை அந்நாட்டு ராணுவத்தினர் வெளியிடவில்லை.
இதுகுறித்து பேசிய கடுனா மாநில அமைச்சர் முகமது இட்ரிஸ், “குழந்தைகளை விடுவிப்பதற்கு எந்தவித தொகையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கடத்தலில் ஈடுபட்டவர்கள் சீக்கிரம் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து 287 மாணவர்கள் கடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அரசிடம் தெரிவித்த நிலையில், 137 குழந்தைகள் மட்டுமே கடத்தப்பட்டதாக கடுனா மாநில அரசு கூறியுள்ளது.